பங்களாதேஷ் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் நேற்று தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 43 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்கதேச அணி சார்பில் தமிம் இக்பால், லிடன் தாஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அந்த அணி 10 ரன்கள் எடுத்திருந்த போது தமிம் இக்பால் 4 ரன்னில் ரோச் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதேவேகத்தில் அடுத்தடுத்து களமிறங்கியவர்களை, வந்த வேகத்தில் பெவிலியன் திருப்பி அனுப்பினர் ரோச்.
கண் இமைக்கும் நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே இருந்தன. 18 ரன்கள் இருக்கும் போது அடுத்தடுத்து மூன்று விக்கெட்கள் வீழ்ந்தன. ரோச் ஒரு கட்டத்தில் நிறுத்த, கம்மில் விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்தார். சிறிது நேரம் நிலைத்து ஆடிய தாஸ் 25(53) ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் வங்கதேசம் அணி 18.4 ஓவர்களில் 43 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 5 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கம்மிஸ் 3, ஹோல்டர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. 2000-01 ஆம் ஆண்டில் இருந்து வங்கதேசம் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 43 ரன் என்பதே அதன் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் ஆகும்.
டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ரன்னில் ஆல் அவுட் ஆனது இந்திய அணிதான். இது நடந்தது 1974 ஆம் ஆண்டு. அந்தாண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. அப்போது புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 42 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 1974 ஆம் ஆண்டில் இந்திய அணியில் பல ஸ்டார் பிளேயர்கள் இருந்தாலும், அப்போதைய காலக்கட்டத்தில் இந்தியா 42 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது பரபரப்பாக பேசப்பட்டது.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஜெஃப் அர்னால்டு 4 விக்கெட்டையும், கிறிஸ் ஓல்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியா முதல் இன்னிங்ஸில் மட்டும் சிறப்பாக விளையாடியது. அதில் இந்தியாவின் ஃபரூக் இன்ஜினியர் 86, குண்டப்பா விஸ்வநாத் 54, கவாஸ்கர் 49, ஏக்நாத் சோல்கர் 42 ரன்களை எடுத்தனர்.