சர்வதேச அளவில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அணிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது.
கடந்த 1974ம் ஆண்டு இதேநாளில் (ஜூலை 13) சர்வதேச ஒருநாள் போட்டியில் காலடி எடுத்துவைத்த இந்திய அணி, இதுவரை 917 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 465 போட்டிகளில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அஜித் வடேகர் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணி, தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி பிரிஜித் படேலின் 82 ரன்கள் மற்றும் அஜித் வடேகரின் 67 ரன்கள் உதவியுடன் 265 ரன்கள் எடுத்தது. 55 ஓவர்கள் கொண்ட அந்த போட்டியில் இந்திய அணி 53.5 ஓவர்களில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணி நிர்ணயித்த இலக்கினை 51.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இங்கிலாந்து அணி எட்டியது. அந்த போட்டியில் 90 ரன்கள் குவித்த ஜே.எச்.எர்டிச் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணி இதுவரை முகமது அசாரூதின் தலைமையில் 116 ஒருநாள் போட்டிகளிலும், தோனி தலைமையில் 111 ஒருநாள் போட்டிகளிலும், சவுரவ் கங்குலி தலைமையில் 110 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளது. அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அணிகள் பட்டியலில் 901 போட்டிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2ஆவது இடத்திலும், 879 போட்டிகளுடன் பாகிஸ்தான் அணி 3ஆவது இடத்திலும், இலங்கை அணி 798 போட்டிகளுடன் 4ஆவது இடத்திலும், 762 போட்டிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 5ஆவது இடத்திலும் இருக்கிறது. இந்திய அணியின் முதல் ஒருநாள் போட்டி எதிரணியான இங்கிலாந்து அணி இதுவரை 692 போட்டிகளுடன் 7ஆவது இடத்தில் இருக்கிறது.