நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீனில் நடைபெற்ற 2026 எஃப்.ஐ.எச் (FIH) ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில, இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் 2026 உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இன்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இந்திய அணி டி பிரிவில் களமிறங்கி விளையாடி வருகிறது. முதல் போட்டியில், வேல்ஸை வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்திடம் சரணடைந்தது. இதே பிரிவில்தான் பாகிஸ்தானும் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நடைபெற்றது. இரு அணிகளும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
அதன்படி, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீனில் தொடங்கிய இந்தப் போட்டியில், முதல் கால்பகுதியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (5-வது நிமிடம்) மற்றும் அபிஷேக் (11-வது நிமிடம்) ஆகியோரின் சிறப்பான கோல்களால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது கால்பகுதியில் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடிக்க, பாகிஸ்தானின் ஹன்னான் ஷாஹித் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அபிஷேக் தனது 2-ஆவது கோலையும், ஹார்திக் சிங் பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை கோலாக மாற்றியும் இந்தியாவை 5-1 என வலுவான நிலைக்கு கொண்டுசென்றனர். பாகிஸ்தான் தரப்பில் சுஃபியான் கான் மற்றும் ஹன்னான் ஷாஹித் (2-ஆவது கோல்) கோல் அடித்து போராடியபோதிலும், கடைசிநேரத்தில், இந்தியா தனது தடுப்பாட்டத்தைச் சிறப்பாக அமைத்து 5-3 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் இந்தத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு (இந்தியா 4-1 வெற்றி) இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய முதல் உலகக் கோப்பை போட்டி இதுவாகும். சர்வதேச ஹாக்கியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தனது பல ஆண்டுகால தோல்வியடையா ஆதிக்கத்தை இதன்மூலம் வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.