விளையாட்டு

’பாக்சிங் டே’ டெஸ்ட்: முரளி விஜய், ராகுல் அதிரடி நீக்கம்: மயங்க் அகர்வால் சேர்ப்பு!

’பாக்சிங் டே’ டெஸ்ட்: முரளி விஜய், ராகுல் அதிரடி நீக்கம்: மயங்க் அகர்வால் சேர்ப்பு!

webteam

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடருக்குப் பிறகு இரு அணிகளும்  டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளன. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சாதனை வெற்றி பெற்ற இந்திய அணி, பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

(மயங்க் அகர்வால்)

இதையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. 

கிறிஸ்துமஸூக்கு மறுநாள் நடக்கும் இந்த ’பாக்சிங் டே’ டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என கூறப்பட்டது.தொடர்ந்து சொதப்பி வரும் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், கே.எல்.ராகுல் ஆகியோரின் ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதனால் அடுத்த போட்டியில் அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால், விஹாரி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங் கலாம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியம் நாளை நடக்கும் டெஸ்ட் போட்டிக்கான, 11 பேர் கொண்ட அணியை அறிவித்துள் ளது. அதில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாத வும் நீக்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வின் காயம் இன்னும் குணமாகாததால் அவருக்குப் பதிலாக சுழல்பந்துவீச்சாளர் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:

விராத் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, புஜாரா, ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா.

ஆஸ்திரேலிய அணியில், ஹேண்ட்ஸ்கோம்புக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் அணிக்குத் திரும்பியுள்ளார்.


ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரோன் பின்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஹசல்வுட்.