விளையாட்டு

ரோகித் சர்மா அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி

rajakannan

ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனையடுத்து 243 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ரோகித் சர்மாவும், ரகானேவும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. ரகானே 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், ரோகித் சர்மாவும் கேப்டன் விராட் கோலி இணைந்தார். கோலி நிதானமாக விளையாட ரோகித் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டார். சீரான வேகத்தில் ரன்களை சேர்த்து வந்த சர்மா 94 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் சர்மாவின் 14-வது சதம் ஆகும்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சர்மா 109 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 5 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். சர்மாவை தொடர்ந்து கோலி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேதர் ஜாதவ்(5), மணிஷ் பாண்டே(11) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4-1 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.