பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 347 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா-பங்களாதேஷ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இதில் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. 30.3 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்திருந்தது. விராத் 59 ரன்களுடனும் ரஹானே 23 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று ஆட்டத்தை தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரஹானே அரைசதம் அடித்த நிலையில் தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 51 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து ரவீந்திர ஜடேஜா, விராத்துடன் இணைந்தார். சிறப்பாக ஆடிய விராத் கோலி, சதம் அடித்தார். இது அவருக்கு 27 வது டெஸ்ட் சதம் ஆகும். கேப்டனாக இது அவருக்கு 20-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.
இதனையடுத்து பின்னர் வந்த வீரர்களில் சாஹா மட்டும் சற்று தாக்குப்பிடித்து விளையாடினார். இவர் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 89.4 ஓவர்களில் 347 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணி பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 241 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது.