இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமன்ஜோத் கவுர் பிடித்த கேட்ச் அமைந்தது. லாரா வோல்வார்ட்டின் சதமடிக்கும் முயற்சியை தடுக்க, பவுண்டரி லைனில் 2 முறை பந்து எகிறியபோதும், அதனை நழுவவிடாமல் பிடித்தார். இந்த கேட்ச் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்றாகும்.
2025 மகளிர் உலகக்கோப்பைக்கான வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே லாரா வோல்வார்ட் என்கிற தென்னாப்பிரிக்கா கேப்டன் இந்திய அணிக்கு வில்லனாக இருந்தார்.. போட்டியில் அவருடைய கேட்ச் எடுக்கப்படாமல் போயிருந்தால் ஒருவேளை கோப்பையை தென்னாப்பிரிக்கா அணியே வென்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.. 4 முறை சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 169 ரன்கள் விளாசிய லாரா, இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களை சைலண்ட் ஆக்குவோம் என்ற கருத்தை வெளிப்படுத்தி பீதியை கிளப்பினார்..
அவர் சொன்னதை போலவே சதமடித்து இந்திய ரசிகர்களை மைதானத்தில் அமைதியாக்கவும் செய்தார்.. இந்தியாவின் வெற்றிக்கு குறுக்கே இருந்த லாரா வோல்வார்ட்டின் கேட்ச்சை அமன்ஜோத் பிடித்தது தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.. அழுத்தமான நேரத்தில் அப்படியான கேட்ச்சை பிடிப்பது என்பது அசாத்தியமான ஒன்று.. ஆனால் அந்தநேரத்திலும் கையிலிருந்து பந்து 2 முறை எகிறி வெளியேறிய போதும், இறுதிவரை பந்திலிருந்து கண்ணை எடுக்காத அமன்ஜோத் ஒரு தரமான கேட்ச்சை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பெரிய பங்காற்றினார்.
தீப்தி சர்மா வீசிய பந்தை லாரா சிக்சருக்கு தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் கேட்ச்சிற்கு வந்த அமன்ஜோத் கவுர் கைகளில் இருந்து 2 முறை பந்து எகிறிகுதித்தது.. ’எப்படியாவது கேட்ச்சை பிடிச்சிடுங்க அமன்’ என்ற ரசிகர்களின் இதயத்துடிப்பு படபடவென அடிக்க, 2 முறை எகிறி குதித்த பந்தை நழுவவிடாமல் கேட்ச்சாக மாற்றினார் அமன்ஜோத் கவுர்.. கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் போராடிய லாராவின் போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வர இந்திய அணிவீரர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ’அப்பாடா’ என பெருமூச்சு விட்டனர்..
அமன்ஜோத் எடுத்த இந்த கேட்ச் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத கேட்ச்களின் வரிசையில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது.. 2024 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் டேவிட் மில்லர் அடித்த சிக்சரை பவுண்டரி லைனில் லாவமாக பிடித்த சூர்யகுமார் யாதவ், சிக்சருக்கு செல்லவேண்டிய பந்தை அவுட்டாக மாற்றினார். அந்த கேட்ச் இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது..
அதேபோல 2007 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மிஸ்பா உல் ஹக்கின் கேட்ச்சை ஸ்ரீசாந்த் பிடிக்க, தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது..
1983 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸின் கேட்ச்சை பின்னோக்கி ஓடி பிடித்த கபில்தேவ், இந்திய அணியின் முதல் உலகக்கோப்பை கனவை நனவாக்கினார்.. இப்படி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத கேட்ச்களின் வரிசையில் 2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அமன்ஜோத் கவுர் பிடித்த கேட்ச்சும் தடம்பதித்துள்ளது..