India Hockey team
India Hockey team twitter
விளையாட்டு

ஹாக்கி ஃபைவ்ஸ் தகுதிச்சுற்று: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

Prakash J

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் முதல்முறையாக உலகக்கோப்பை ஐவர் ஹாக்கி தொடர் (ஹாக்கி ஃபைவ்ஸ்) வரும் ஜனவரியில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆண்களுக்கான ஆசியப்பிரிவு தகுதிச்சுற்று ஓமனில் நடைபெற்றது. அதில் எலைட் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் இடம்பெற்றிருந்தன. அதன்படி, அரையிறுதியில் ஓமனை வீழ்த்தி பாகிஸ்தானும், மலேசியாவை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இறுதிப்போட்டியில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரஹ்மான் முதல் கோலை அடித்தார். அதற்குப் பிறகு இந்திய வீரர்கள் ஜூக்ராஜ் 7வது நிமிடத்தில் ஒரு கோலும், 10வது நிமிடத்தில் மனிந்தர் சிங் ஒரு கோலும் அடித்தனர். பின்னர் பாகிஸ்தான் தரப்பில் ராணா அப்துல் 13வது நிமிடத்திலும், ஹயாத் 14வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதையடுத்து முதல் பாதியில் இந்தியா 2-3 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.

இரண்டாவது பாதியில் கேப்டன் அர்ஷத் 19வது நிமிடத்தில் கோல் அடிக்க பாகிஸ்தான் 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் இந்திய அணி தரப்பில் ரகீல் அகம்மது 19வது மற்றும் 26வது நிமிடங்களில் 2 கோல்கள் அடிக்க போட்டி சமன் ஆனது. இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய பெனால்டி ஷூட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.

இதில் இந்திய அணி தரப்பில் மனிந்தர் சிங், குர்ஜோத் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பு தங்களின் 2 வாய்ப்புகளையும் வீணடிக்க, இந்திய அணி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இதன்மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு, நடைபெறும் முதலாவது ஐவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பிரதமர் மோடி இந்திய அணிக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.