12-வது ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் பீஹார் மாநிலம் ராஜ்கிர் நகரில் உள்ள பீஹார் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிடி ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.
கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் போட்டியில் இந்தியா, மலேசியா, சீனா, தென் கொரியா, ஜப்பான், கஜகஸ்தான், வங்கதேசம் மற்றும் சீன தைபே முதலிய 8 அணிகள் பங்குபெற்று விளையாடின.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பரபரப்பாக நடந்துமுடிந்த லீக் சுற்றுப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, மலேசியா, சீனா, கொரியா முதலிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
இந்தியா மற்றும் தென்கொரியா அணிகள் மோதிய முதல் சூப்பர் 4 போட்டி 2-2 என சமனில் முடிந்தது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற மற்றோரு ஆட்டத்தில் சரிசம பலம் கொண்ட மலேசியாவை எதிர்கொண்டு விளையாடியது இந்தியா.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அசத்தியது. சிறப்பாக செயல்பட்ட மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா மற்றும் விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
தற்போதைய நிலவரப்படி ஒரு போட்டியில் வென்று, ஒரு போட்டியை டிரா செய்த இந்தியா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் மலேசியா அணி இரண்டாவது இடத்தில் 3 புள்ளிகளுடன் நீடிக்கிறது. அடுத்த போட்டியில் சீனாவை எதிர்த்து விளையாடவிருக்கிறது இந்தியா.