இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி முதலில் தடுமாறினாலும் வோக்ஸ், பெர்ஸ்டோவ் அபார ஆட்டத்தால் 396 ரன்கள் குவித்தது. வோக்ஸ் 137 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து, 289 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடிய இந்திய அணியில் முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முரளி விஜய் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். முரளி விஜயை தொடர்ந்து கே.எல்.ராகுலும் 10 ரன் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 17 ரன்னிற்கு 2 விக்கெட்களை இழந்தது. அதனையடுத்து, புஜாரா 17, ரகானே 13, விராட் கோலி 17, தினேஷ் கார்த்திக் 0 என பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 66 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஹர்திக் பாண்ட்யா - அஸ்வின் ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. இருவரும் மாறி, மாறி பவுண்டரிகளை அடித்தனர். ஆனால், நிதானமாக விளையாடிய பாண்ட்யா 26 ரன்னில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து குல்தீப் யாதவும் டக் அவுட் ஆனார். அஸ்வின் நிதானமாக விளையாடினாலும் அடுத்த வந்த முகமது சமியும் டக் அவுட் ஆனார். இஷாந்த் சர்மாவும் 2 ரன்னில் நடையை கட்ட, இந்திய அணி 130 ரன்னில் சுருண்டது.
அஸ்வின் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் பிராட் 4, ஆண்டர்சன் தலா 4 விக்கெட்கள் சாய்த்தனர். வோக்ஸ் 2 விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டாது தோல்வியை தழுவியுள்ளது.