இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கான் அணி 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாம் நாள் ஆட்டததில் ஹர்திக் பாண்டியா 71 ரன்களும், உமேஷ் யாதவ் 19 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். ஆப்கான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் யமின் அகமத்சய் 3 விக்கெட்டுகளும், வாஃபதார் மற்றும் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். முதல் நாளான நேற்று ஷிகர் தவான், முரளி விஜய் சதம் விளாசி இருந்தனர்.
இதனையடுத்து உணவு இடைவேளைக்கு பின்னர் ஆப்கான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக முகமது ஷாஜத், ஜவேத் அஹ்மதி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 8 ரன்கள் எடுத்து அந்த அணி சிறப்பாகவே தொடங்கியது. ஷாஜத் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், ஆப்கான் அணி 15 ரன்கள் எடுத்திருந்த போது ஷாஜத் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.
ஜவேத் (1), அஃப்சர் (6) ஆகிய இருவரின் விக்கெட்டுகளை இஷாந்த் சர்மா சாய்த்தார். ரஹ்மத் ஷா 14 ரன்னில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இது அவருக்கு 100 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட். அஸ்கரின் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். ஆப்கான் அணி 17 ஓவரில் 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆப்கான் அணிக்கு இது முதலாவது டெஸ்ட் போட்டி போட்டி என்பதால் அந்த அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.