விளையாட்டு

பந்துவீச்சில் அதிரடி காட்டிய நியூசிலாந்து: 165 ரன்களில் சுருண்டது இந்தியா..!

பந்துவீச்சில் அதிரடி காட்டிய நியூசிலாந்து: 165 ரன்களில் சுருண்டது இந்தியா..!

webteam

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணியை இந்தியா ஒயிட் வாஷ் செய்தது. இதற்குப் பழி தீர்க்கும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவை நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்தது.

இந்நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாளில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 122 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மீண்டும், இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அணியை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்‌ட்ட துணைக்கேப்டன் ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 165 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் மற்றும் சவ்தி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள நியூசிலாந்து, 13 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.