விளையாட்டு

ஊசலாடும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆசியக்கோப்பை கனவு!

நிவேதா ஜெகராஜா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, தொடரில் நீடிப்பதற்கான வாய்ப்புகளை உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

துபாயில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு நடந்த நான்காம் நிலை ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.

முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் இலக்குடன் ஆடத்தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் குவித்தனர். 12-வது ஓவரில் சஹல் வீசிய பந்தில் முதல் விக்கெட் விழ, அடுத்தடுத்த ஓவர்களில் மொத்தம் 4 விக்கெட்களை இலங்கை அணி இழந்தது.

எனினும், இலங்கை கேப்டன் தசன் சனகா மற்றும் பனுகா ராஜபக்சே ஆகியோர் நிலைத்து நின்று, முறையே 33 மற்றும் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர். அதிகபட்சமாக 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை சஹல் வீழ்த்தியிருந்தார். இறுதியில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் 174 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த தோல்வி மூலம் இந்திய அணியின் ஆசிய கோப்பை கனவு ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வென்றால், இந்திய அணி வெளியேறும் நிலை ஏற்படும்.