விளையாட்டு

ரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா!

webteam

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. டி-20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆண்டிகுவாவில் நடந்து வந்தது. காயம் காரணமாக விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதலில் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது. புஜாரா சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 56.1 ஓவரில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய தரப்பில், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து 2 வது இன்னிங்ஸை தொடங்கிய, இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ரஹானே 54 ரன்களும் விஹாரி 64 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி தொடங்கி, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும், முதல் டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி நடக்கிறது.