விளையாட்டு

“பேட்டிங்கில் மீண்டும் மாஸ் காட்டிய வெஸ்ட் இண்டீஸ்” - சொதப்பிய ரோகித்

“பேட்டிங்கில் மீண்டும் மாஸ் காட்டிய வெஸ்ட் இண்டீஸ்” - சொதப்பிய ரோகித்

rajakannan

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் சமனில் முடிவடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த இரண்டு போட்டியிலும் சதம் அடித்து மிரட்டினார்.

இந்நிலையில் 3வது ஒரு நாள் போட்டி புனேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்துள்ளது. ஹோப் 95 ரன்களும், ஹெட்மயர் 37 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய நர்ஸ் 40 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட் சாய்த்தார். குல்தீப் இரண்டு விக்கெட் எடுத்தார். தொடர்ச்சியாக பேட்டிங்கில் அசத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தப் போட்டியிலும் அதனை உறுதி செய்துள்ளது.

284 ரன் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 8 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் போல்ட் ஆகி அவுட் ஆனார். இதனையடுத்து, கேப்டன் விராட் கோலி, தவான் உடன் ஜோடி சேர்ந்துள்ளார். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.