விளையாட்டு

மகுடம் சூடுமா டிராவிட் ஆர்மி!

webteam

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. 

முன்னாள் சாம்பியன்கள் மோதும் இந்தப் போட்டி நியூசிலாந்தின் மவுண்ட்  மாங்கானு மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழும் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காண்கிறது. பிரித்வி ஷா, சுப்மான் கில் ஆகியோர் பேட்டிங்கிலும், அன்குல் ராய், ஷிவம் மாவி, நாகர்கோட்டி ஆகியோர் பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

ஜூனியருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. நான்காவது முறையாக மகுடம் சூடி சாதனை படைக்கும் முனைப்பில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுடன் இதுவரை மோதிய 34 ஆட்டங்களில் இந்திய அணி 20ல் வெற்றி பெற்றுள்ளது.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணிக்கு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ளார். அவரது வழிக்காட்டுதலின் பேரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில்  ஜூனியருக்கான உலகக்கோப்பையை 4வது முறையான இந்தியா கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.