வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தவானும், ரஹானேவும் களமிறங்கினர். 20.4 ஓவரில் இந்தியா 100 ரன்களை தொட்டது. ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 3வது முறை.
ஸ்கோர் 132 ரன்களாக இருந்த போது ரஹானே 62 ரன்களில் கேட்ச் ஆக, சிறிது நேரத்தில் தவானும் 87 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். யுவராஜ்சிங் 4 ரன்னில் வெளியேறினார். பின்னர் கோலியும் தோனியும் ஆடிக்கொண்டிருந்த போது, திடீரென மழை குறுக்கிட்டது. ஆட்டம் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் தொடங்கி 8 பந்துகள் வீசப்பட்டபோது, மீண்டும் மழை பெய்தது.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர், 39.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்களாக இருந்தது. விராத் கோலி 32 ரன்களுடனும், தோனி 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் முதல் ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது.