விளையாட்டு

8 பேட்ஸ்மேன் இருந்தும் சொதப்பல் - இந்திய அணி படுதோல்வி

8 பேட்ஸ்மேன் இருந்தும் சொதப்பல் - இந்திய அணி படுதோல்வி

rajakannan

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியில் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். அதேபோல், முன்ரோ 34, வில்லியம்சன் 34 ரன்கள் எடுத்தனர். 

இதனிடையே, 220 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில், ஷிகர் தவான் 29, விஜய் சங்கர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ரோகித் 1, பண்ட் 4, தினேஷ் கார்த்திக் 5, ஹர்திக் பாண்ட்யா 4, புவனேஷ்வர் குமார் 1 என அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சற்று நேரம் தாக்குபிடித்த குர்ணால் பாண்ட்யா 20 ரன்னில் அவுட் ஆக, கடைசி கட்டம் வரை போராடிய தோனி 31 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் இந்திய அணி 19.2 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி 3 விக்கெட் சாய்த்தார். பெர்குசன், சண்ட்னெர், சோதி தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர். 84 ரன்கள் விளாசிய செய்பெர்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. அதே உற்சாகத்தில் இந்திய அணி டி20 தொடரிலும் வெற்றிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது, புவனேஷ்வர் குமார், அகமது, ஹர்திக் பாண்ட்யாம் சாஹல் என அனைவருமே ரன்களை வாரி வழங்கினர். நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை இறுதிவரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. 

ஏற்கனவே 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பி இருந்தது. இன்றைய போட்டியில் ரோகித் சர்மா தொடங்கி குர்ணால் பாண்ட்யா வரை கிட்டத்தட்ட 8 பேர் பேட்ஸ்மேன்கள். இருப்பினும் ஒருவரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. 51 ரன்னிற்கு இந்திய அணி ஒரு விக்கெட் மட்டுமே வீழ்ந்திருந்தது. ஆனால், 77 ரன் எடுப்பதற்கு 6   விக்கெட்களை பறிகொடுத்துவிட்டது. 

விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. ரோகித் கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வருகிறார்.