இந்தியாவுக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி, 161 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. முதலாவது ஒரு நாள் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, மும்பையில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் வீராங்கனைகள், இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்தனர்.
அந்த அணியில் அதிகப்பட்சமாக நடாலி சிவெர் (Natalie Sciver) 85 ரன் எடுத்தார். லாரன் வின்ஃபீல்ட் 28 ரன்னும் டேமி பியாமோன்ட் 20 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணை தாண்டவில்லை. இதனால் அந்த அணி, 43.3 ஓவரில் 161 ரன்னுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. இந்திய தரப்பில் அனுபவ வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி ஆட்டத்தை தொடங்கியது. ஜெமிமா ரோட்ரிகுயஸும் மந்தனாவும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரின் 5 வது பந்தில் ரோட்ரிகுயஸ் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதையடுத்து மந்தனாவும் ராவுத்தும் ஆடி வரு கின்றனர்.