விளையாட்டு

4ஆவது டி-20: ஷர்துல் தாகூர் அசத்தல் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!

webteam

அகமதாபாத்தில் நடந்த 4ஆவது 20-20 கிரிகெட் போட்டியில் கடைசி ஓவரில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கிய ரோகித் சர்மா 12 ரன்னிலும், கே.எல்.ராகுல் 14 ரன்னிலும், கேப்டன் கோலி 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். அரைசதம் கடந்த அவர் 57 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவரில் 185 ரன்கள் குவித்தது. இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பட்லர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் ஜோசன் ராய், பேரிஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்து அதிரடி காட்டினர். இதனால் பரபரப்பான சூழலில் ஸ்டோக்ஸ், கேப்டன் மோர்கன் ஆகியோர் சர்துல் தாகூர் பந்துவீச்சில் ஓரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற கட்டத்தில் சிக்ஸர், இரண்டு வொய்டு என ரன்கள் கிடைத்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் கடைசி 2 பந்தை கட்டுக்கோப்புடன் வீசியதால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2க்கு 2 என சமன் செய்தது.

நாளை நடைபெறவுள்ள கடைசி மற்றும் 5ஆவது போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.