விளையாட்டு

2008 ஆடவர் ஐபிஎல் அறிமுக ஏல சாதனையை முறியடித்த மகளிர் ஐபிஎல் -5 அணிகளுக்கு இத்தனை கோடிகளா?

சங்கீதா

மகளிருக்கான ஐபிஎல் போட்டி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இன்று அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில், மகளிருக்கும் இதேபோன்று ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ கடந்த வருடம் முதலே திட்டமிட்டு வந்தது. ஏனெனில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் மகளிருக்கான பிரீமியர் லீக்குகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

இதனால் இந்தியாவிலும் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தநிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார். அதன்படி, மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக 5 அணிகள் ரூ.4,669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மகளிருக்காக WPL கிரிக்கெட் போட்டி நடத்தப்பட இருப்பது வரலாற்றின் புதிய தருணம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டில் புரட்சியின் துவக்கத்தை இது குறிப்பதாக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த விளையாட்டுத்துறைக்கும் ஒரு மாற்றத்திற்கான பயணத்தை இது வழிவகுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆடவருக்கான ஐபிஎல் அறிமுகத்தின்போது 8 அணிகளுக்கான மொத்த ஏலம் சுமார் ரூ.3,000 கோடியாக இருந்த நிலையில், தற்போது மகளிருக்கான பிரீமியல் லீக்கில் 5 அணிகள் ரூ.4,669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆடவர் ஐபிஎல் ஏலத்தின் சாதனையை, மகளிர் ஐபிஎல் முறியடித்துள்ளது. 

அத்துடன் மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையையும் ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டிலிருந்து 2027-ம் ஆண்டு வரையான ஐந்தாண்டுகளுக்கான மகளிர் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப வயாகாம் 18க்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஐபிஎல் ஆட்டத்துக்கு ரூ. 7.09 கோடி உரிமை கட்டணம் என்ற விகிதத்தில், 5 ஆண்டு ஒளிபரப்பு உரிமத்தை வயாகாம் 18 வாங்கியுள்ளது.

அதன்படி, 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. இந்த உரிமை இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அனைத்து விதமான தொலைக்காட்சி சேனல் மற்றும் டிஜிட்டல்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமே, ஆடவர் ஐபிஎல் போட்டியின் உரிமையையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.23,758 கோடிக்குப் பெற்றுள்ளது. மகளிருக்கான பிரீமியர் லீக் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா அணிகளின் உரிமையாளர்கள் பங்குபெறவில்லை.