விளையாட்டு

உ.பி.யில் ரூ.700 கோடியில் அமையும் அதிநவீன விளையாட்டு பல்கலைக்கழகம்

JustinDurai

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், மேஜர் தயான் சந்த் பெயரில் அமையவிருக்கும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த மறைந்த ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் பெயரில், மீரட் நகரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமையவிருக்கின்றது. இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்தப் பல்கலைக்கழகம் இளைஞர்களுக்கு சர்வதேச அளவிலான வசதிகளை வழங்கும் என்று தெரிவித்தார். ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவார்கள் என்று அவர் கூறினார். விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.

தற்போது செயல்படுத்தப்படும் தேசிய கல்விக்கொள்கையில் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மோடி கூறினார். உத்தரப்பிரதேசத்தில் முந்தைய ஆட்சியில் குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்கள் விளையாடினர் என்றும், சட்டவிரோத நில அபகரிப்பு போட்டிகள் நடந்ததாகவும் கடுமையாக விமர்சித்தார்.

புதிய பல்கலைக்கழகம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கைப் புல் ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், செயற்கைப்புல் ஓடுதளம், நீச்சல் குளம் உள்ளிட்ட அதி நவீன வசதிகள் அனைத்தும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிட வேண்டும் என்ற பிரதமரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில், தயான் சந்த் பெயரிலான பல்கலைக்கழகம் அமையும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.