விளையாட்டு

பெயருடன் கூடிய ஜெர்ஸி - வரலாற்றில் முதன்முறையாக ஆஷஸ் தொடரில் அறிமுகம்

பெயருடன் கூடிய ஜெர்ஸி - வரலாற்றில் முதன்முறையாக ஆஷஸ் தொடரில் அறிமுகம்

webteam

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியுடன் விளையாட உள்ளனர். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ளது. கிரிக்கெட் உலகமே உற்று நோக்கும் தொடர்களில் ஆஷஸ் தொடரும் ஒன்று. இந்தத் தொடரில் இம்முறை சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இம்முறை ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ள ஜெர்ஸியுடன் விளையாடவுள்ளனர். 

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப் பட்டுள்ளது. அதில், “டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்ஸியில் வீரர்களின் எண்களும், பெயரும் இடம்பெறவுள்ளது” எனப் பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவுடன் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் புதிய ஜெர்ஸியை அணிந்து உள்ள படமும் சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வீரர்கள் தங்களின் ஜெர்ஸியில் பெயர் மற்றும் எண் ஆகியவை உடன் விளையாடி வருகின்றனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களின் ஜெர்ஸியில் பெயர் மற்றும் எண் இல்லாமல் தான் இருந்து வந்தது. இந்தச் சூழலில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் ஜெர்ஸியில் பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.