இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட கிரிக்கெட் தொடர்கள் ஏன் நடைபெறுவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதிலளித்துள்ளார்.
கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த சூழலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், அதன்மூலம் கிடைக்கும் வருவாயை இரு நாடுகளின் கொரோனா மீட்புப்பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக விளையாட்டு தொகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், “தற்போதுள்ள அரசாங்கத்துடன் இரு அணிகளும் கிரிக்கெட் விளையாடினால், மைதானத்தில் பயங்கரமான சூழ்நிலை உருவாகும் என நான் நினைக்கிறேன்” என்றார். இதன் காரணமாக இருநாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் நடைபெற முடியாத சூழல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்திய அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சித்தது. ஆனால் எல்லைப் பிரச்னை ஒரு முடிவிற்கு வரும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது.