விளையாட்டு

பவுன்சர் பந்து தாக்கி பாக். வீரர் இமாம் உல் ஹக் படுகாயம்!

பவுன்சர் பந்து தாக்கி பாக். வீரர் இமாம் உல் ஹக் படுகாயம்!

webteam

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் படுகாயமடைந்தார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதையடுத்து ஒரு நாள் போட்டித் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. 

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்தது. அந்த அணியின் ராஸ் டெய்லர் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிக்கோலஸ் 33 ரன் எடுத்தார். மற்றவர்கள் அதிக ரன் சேர்க்கவில்லை. பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அபிரிதி 4 விக்கெட்டும் ஹசன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஹர் ஜமான் 88 ரன்களும் பாபர் ஆஸம் 46 ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டியின் போது தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 16 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, 13 வது ஓவரை வீசினார் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன். 

இவரது பவுன்சர் பந்து இமாமின் ஹெல்மெட்டில் பலமாகத் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு தரையில் படுத்தார். அவருடன் ஆடிக்கொண்டிருந்த பஹார் ஜமானும் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனும் அவருக்கு உதவினர். அவரால் எழுந்து கொள்ள முடியவில்லை.

உடனடியாக அங்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவரை பரிசோதித்த அவர்கள், பின்னர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.