விளையாட்டு

தோனிக்கு இது கடைசி டி20 போட்டியா ? எப்படி ?

தோனிக்கு இது கடைசி டி20 போட்டியா ? எப்படி ?

rajakannan

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றையப் போட்டி, மகேந்திர சிங் தோனிக்கு கடைசி டி20 போட்டியாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது. 

முதல் போட்டியில் தோனியின் நிதானமான ஆட்டம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. அவர் 37 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாத காரணத்தினால் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கிலும் சரிவு ஏற்பட்டது. அதனால்தான் கடைசி பந்தில் அந்த அணி வெற்றி பெற்றது. 

தோனி இந்தப் போட்டியில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குள்ளாகி உள்ளது. தோனிக்கு ஓய்வு அளித்து, விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஹேமங்க் பதானி கூறியுள்ளார். இருப்பினும், இந்தப் போட்டியில் தோனி நிச்சயம் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பெங்களூர் மைதானத்தில் தோனி பேட்டிங் சராசரி நன்றாகவே உள்ளது. இதுவரை பெங்களூரு மைதானத்தில் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 536 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 59.55 ஆகும். அதேபோல், விசாகப்பட்டினம் மைதானத்தில் இருந்து இந்த மைதானம் வித்தியாசமானது. இது பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். 

இருப்பினும், தோனி இன்றைய போட்டியுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இந்த கருத்தினை பதிவிட்டுள்ளனர்.

அதாவது, தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க போவதாக கூறப்படுகிறது. உலகக் கோப்பைக்கு முன்னர் இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இது. அப்படி உலகக் கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெற்றால் இன்றைய போட்டிதான் அவருக்கு கடைசிப் போட்டி.