விளையாட்டு

“ரஷித் என்னை முறைத்தால், காலி செய்துவிடுவேன்” - கெயில் குறித்து ராகுல் ஓபன் டாக்..!

“ரஷித் என்னை முறைத்தால், காலி செய்துவிடுவேன்” - கெயில் குறித்து ராகுல் ஓபன் டாக்..!

webteam

ரஷித் கான் தன்னை முறைத்தால் அவரை பந்துவீச்சை காலி செய்துவிடுவேன் என கிறிஸ் கெயில் தன்னிடம் தெரிவித்ததாக கே.எல்.ராகுல் ஐபிஎல் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட வீடியோ கலந்துரையாடலில் மயாங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் பேசினர். அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் குறித்த அனுபவங்களை ராகுல் பகிர்ந்தார். ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கிறிஸ் கெயில் விளையாடிக்கொண்டிருக்கிறார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள்.

அந்த வகையில் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் கிறிஸ் கெயில் தன்னிடம் களத்தில் பேசியதை ராகுல் பகிர்ந்துள்ளார். “ரஷித் கான் பந்துவீச வந்தால் அவரை (பந்துவீச்சை) நான் காலி செய்வேன். ஸ்பின் பவுலர்கள் என்னை முறைப்பது எனக்கு பிடிக்காது. ஒருவேளை அவர் என்னை முறைத்தால், நான் அவரை காலி செய்யப்போகிறேன்” என்று கெயில் கூறியதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய போட்டியில் கெயில் மிகவும் மாறுபட்ட விதமாக நடந்து கொண்டதாகவும், அவரது கோபத்தை பார்க்கும்போது, அவர் கண்டிப்பாக அன்று சதம் அடிப்பார் என கணித்ததாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில் கிறிஸ் கெயில் 63 பந்துகளில் 102 ரன்களை குவித்திருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. அதை எதிர்த்து ஆடிய ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே கொடுத்து வந்த ரஷித் கானின் பந்துவீச்சில், அன்று 16 பந்துகளில் 42 ரன்களை கெயில் விளாசியிருந்தார்.