விளையாட்டு

618 விக்கெட்டுகள் வீழ்த்தினால், அது எனக்கு கடைசி டெஸ்ட்: அஸ்வின்

618 விக்கெட்டுகள் வீழ்த்தினால், அது எனக்கு கடைசி டெஸ்ட்: அஸ்வின்

rajakannan

618 விக்கெட்டுகள் கைப்பற்றினால் அது என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்திய அணியில் மிகவும் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக வலம் வந்தவர் அஸ்வின். ஆனால் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு அவரது பந்துவீச்சில் சற்று தொய்வு ஏற்பட்டது. அதிக அளவு விக்கெட்டுகள் எடுக்கவில்லை. மேலும், கடந்த இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு எதிரான தொடர்களில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக அஸ்வின் பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். தேர்வுக் குழு குறித்து அவர் விமர்சனம் செய்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார். இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

கும்ளே வீழ்த்திய 619 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நான் கும்ளேவின் மிகப்பெரிய ரசிகன். அவர் டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவரது சாதனையை முறியடிக்கும் எண்ணமில்லை. 618 விக்கெட்டுகள் எடுத்தால் அந்த போட்டியுடன் ஓய்வு பெற்றுவிடுவேன்’ என்று கூறினார்.

மேலும், ‘இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவர். அவர் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். ஒவ்வொரு நாளும் தடைகளை வெற்றி கொண்டு வந்துள்ளார்’ என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்த ஒருவீரராக பயிற்சி எடுத்து வருவதாகவும், வாய்ப்பு வரும் போது திறமையை நிரூபிப்பேன் என்றும் கூறினார்.