விளையாட்டு

சிக்ஸர் விளாசி சதம் அடித்த தோனி - இந்திய அணி 359 ரன் குவிப்பு

rajakannan

பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், தோனி அசத்தலாக விளையாடி சதம் அடித்தனர்.

உலகக் கோப்பையின் 10வது பயிற்சிப் போட்டி இன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே நடைபெற்று வருகிறது. வேல்ஸ் நாட்டில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஒரு ரன்னில் ஏமாற்றினார். சற்று நேரம் தாக்குப்பிடித்த ரோகித் சர்மாவும் 19 ரன்னில் நடையைக் கட்டினார். இருப்பினும், கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய கோலி 47(46) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 2 ரன்னில் வெளியேறினார். 

பின்னர், கே.எல்.ராகுலுடன், தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். அதனால், அணியின் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. அசத்தலாக விளையாடி சதம் அடித்தார் கே.எல்.ராகுல். அவர் 108 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 4 சிக்ஸர், 12 பவுண்டரிகள் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தோனி, 99 ரன்னில் இருந்த போது சிக்ஸர் விளாசி சதம் அடித்தார். அவர் 73 பந்துகளில் சதம் விளாசினார். 78 பந்துகளில் 7 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் களமிறங்கிய ஜடேஜா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். பங்களாதேஷ் அணியில் ருபல் ஹுசைன், ஷகிப் அல் ஹாசன் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருந்தனர். அதனால், சற்றே இந்திய அணியின் மீது விமர்சனம் எழுந்தது. அதனையடுத்து, இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளனர்.