விளையாட்டு

“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்?

“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்?

rajakannan

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் டி20 போட்டிக்கும், ஒருநாள் போட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

உலகக் கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்திய அணிகள் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கிறிஸ் கெயில், ரஸல் உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்கள் கொண்ட பலம் வாய்ந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருந்த போதும் அந்த அணி மீது எதிர்பார்ப்பு குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிய விதம் அதனை தெளிவாக காட்டுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில், கிறிஸ் கெயில் தொடங்கி, லெவிஸ், ஹோப், பூரான், ஹெட்மயர், ஹோல்டர், ரஸல், பிராத்வெயிட் என 8 பேட்ஸ்மேன்கள் விளையாடினர். 

இத்தனை பேட்ஸ்மேன்கள் இருந்தும், முக்கியமாக ஹிட்டர்கள் இருந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 212 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த அணியில் பூரான் மட்டுமே நிலைத்து ஆடி 78 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். ஹெட்மயர் 39, கெயில் 36 ரன்கள் எடுத்தனர். ஆனால், மற்றவர்கள் சொதப்பினர். டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதங்களை குவித்த ரஸல் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர் விளாசி 21 ரன்னில் நடையைக் கட்டினார். பந்துவீச்சை காட்டிலும் பேட்டிங்கில்தான் வெஸ்ட் இண்டீஸ் பலம் அதிகம். அப்படியிருந்தும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், ஒருநாள் போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இங்கிலாந்து வீரர்கள் விளையாடினர். 91 ரன்னிற்குதான் முதல் விக்கெட்டை இங்கிலாந்து பறிகொடுத்தது. தொடக்க வீரர் ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 100 ரன்கள் அடித்தார். 94 பந்துகளில் நூறு ரன்கள் என்பது மிகவும் கச்சிதமான ஆட்டம். பேரிஸ்டோவ், 45, வோக்ஸ் 40 ரன்கள் எடுத்தனர். இரண்டு விக்கெட்களை மட்டுமே பறிகொடுத்து இங்கிலாந்து 33.1 ஓவர்களில் எளிதில் வென்றது. கிளாசிக் பேட்ஸ்மேன்கள் என்பதை இங்கிலாந்து வீரர்கள் நிரூபித்தனர். 

அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற பெரிய வாய்ப்பு இருந்தது. ஆஸ்திரேலிய அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய போதும், அதனை வெஸ்ட் இண்டீஸ் அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை. அன்றைய போட்டியில் கவுல்டர்-நைல் 60 பந்துகளில் 92 ரன்கள் விளாசி இருந்தாலும், போட்டியில் முக்கியமான திருப்பு முனையாக இருந்தது ஸ்மித் - கரே பார்ட்னர்ஷிப் தான். அலெக் கரே இக்கட்டான நேரத்தில் 55 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 103 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் அடித்தார். ஸ்மித் சந்தித்த 103 பந்துகள் தான் முக்கியமானது. 

அன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 289 ரன் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் எட்ட முடியவில்லை. முக்கியமான ஆட்டத்தில் கெயில் 21 ரன்னில் அவுட் ஆனார். லெவிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஹோப் 68, ஹோல்டர் 51 ரன்கள் எடுத்தனர். பூரான் 40 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ரஸல் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளுடன் 15 ரன்னில் நடையை கட்டினார். ஆஸ்திரேலியா தன்னை ஜாம்பவான் என நிரூபித்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் பலமான அணி என்பதை நிரூபிக்க தவறிவிட்டது.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை தொடக்க வீரர்களில் ஒருவர் நிச்சயம் சிறப்பாக விளையாட வேண்டும். குறைந்தபட்சம் அரைசதமாவது அடிக்க வேண்டும். அப்படி தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், மூன்றாவது, நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டும். ஒரு நாள் போட்டியை பொருத்தவரை மூன்று வீரர்களாக நிலைத்து ஆடி அரைசதத்திற்கு மேல் அடித்தால்தான் கௌரவமான ஸ்கோர் கிடைக்கும். நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டும் அதுதான் ஒருநாள் போட்டிக்கும், டி20 போட்டிக்கும் உள்ள வித்தியாசம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் டி20 போட்டிக்கும், ஒருநாள் போட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்டர்கள் இருப்பது முக்கியமல்ல. களத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறார்கள், எவ்வளவு ரன்கள் அடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். குறைந்தபட்சம் அரைசதம் அடிக்கிற வரையிலாவது களத்தில் நிற்க வேண்டும். இதனை கெயில் ரஸல் புரிந்து கொள்ள வேண்டும்..