இங்கிலாந்து அணியில் உள்ளதைப் போல் இந்திய அணியிடம் பேட்டிங் பலம் இல்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாஸர் ஹுசைன் கூறியுள்ளார்.
உலகக்கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தத் தொடரில் எதிரணியை மிரட்டும் 6 வீரர்களை ஹுசைன் கணித்துள்ளார். அவரது கணிப்பின் படி, விராட் கோலி, கேனே வில்லியம்சன், கிறிஸ் கெயில், அண்ட்ரூ ரஸல், ரஷித் கான் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இந்த உலகக் கோப்பை தொடரில் ஜொலிப்பார்கள்.
மேலும், இங்கிலாந்து அணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது என்று ஹுசை கூறியுள்ளார். “நான் இங்கிலாந்து அணிக்கு எதிராக கேப்டனாக இருந்திருந்தால், அவர்களை கண்டு மிரண்டு போயிருப்பேன். தற்போதைய அணியில் உள்ள பலரும் மிரட்டுகிறார்கள். தொடர்ந்து நான்கு போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்கள்.
முன்பு ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடும் போது, அவர்களது முதல் 5 விக்கெட்டை சாய்த்துவிடுவோம். ஆனால், கில்கிறிஸ்ட் கடைசி வரை இருந்து ஆட்டத்தை உங்களிடம் இருந்து எடுத்துச் சென்றுவிடுவார். அதற்போல், இங்கிலாந்து அணியில் முதல் 5 விக்கெட் வீழ்ந்தாலும் ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
ஒருநாள் தொடரில் முதல் இரண்டு இடத்தில் உள்ள இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் என்ன வித்தியாசம் என்றால், இங்கிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் பலம் உள்ளது. அது உண்மையில் இந்திய அணியிடம் இல்லை. அதேபோல், அவர்களின் பந்துவீச்சும் மிகவும் சிறப்பானதாக இல்லை” என்று அவர் கூறினார்.