விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: 2022 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பு ?

jagadeesh

இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் 2022 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா எனச் சந்தேகம் எழுந்தது.

உலகக் கோப்பை தொடர் தொடங்க பல மாதங்கள் உள்ளதால், அதை ரத்து செய்வதை அல்லது ஒத்தி வைப்பதைக் குறித்து ஆலோசிக்கப்படவில்லை என உலகக்கோப்பையின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே கடந்த மாதம் தெரிவித்திருந்தார். ஆனால் உலகளவில் கொரோனா பாதிப்பு குறையாததால் இப்போது ஐசிசி தன்னுடைய முடிவை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே டி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக் குழு நாளை ( மே 28 ஆம் தேதி) கூடி ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் 2022 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படலாம் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை ஐசிசி வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐசிசி வட்டார தகவலின்படி "2021, 2022 பிப்ரவரி - மார்ச் மாதங்களில் டி20 உலகக் கோப்பையை நடத்த முடியாது. இதனை அக்டோபர் - நவம்பரில் மட்டுமே நடத்த முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படும் முடிவு நாளைதான் தெரிய வரும் என்று ஐசிசி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.