விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா - சில மணிநேரங்களில் நடந்தது என்ன?

சங்கீதா

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஐசிசியின் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்ததாக தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், சில மணிநேரங்களில், டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்தியா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆடவர் உலக கிரிக்கெட் அணிகளுக்கான அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் ஐசிசி சார்பில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியாகியிருந்தது. இதில், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட 3 வடிவப் போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி முதலிடம் பிடித்திருந்தது. அதன்படி, அணிகளின் தரவரிசையில் இந்திய அணி டி20 (267 புள்ளிகள்), ஒருநாள் (114 புள்ளிகள்) மற்றும் டெஸ்ட்டில் (115 புள்ளிகள்) எனப் பெற்று முதல் இடத்தில் இருந்தது.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற இந்திய அணி, நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதனால், டெஸ்ட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் முதலிடம் பிடித்ததாக ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியிடம் அடைந்த தோல்வியின் காரணமாக ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 106 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 100 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 85 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளதாகவும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாலை 7 மணியளவில் திருத்தம் செய்யப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், 126 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்திய அணி 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கும் சரிந்தது. ஐசிசியின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையால், இந்தியா முதலிடம் பிடித்த நிலையில், அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியா அணி மீண்டும் 126 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இருப்பினும், இந்தத் திருத்தமும் தவறானது என்றும், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, ஆஸ்திரேலியா 4 புள்ளிகளை இழந்து 122 ஆக இருக்கும் என்றும், ஆனால் இந்தப் புதிய திருத்தத்தில் ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதாக இன்சைடு ஸ்போர்ட்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.