பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மறுத்ததை அடுத்து, ஹைப்ரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த ஐசிசி மற்றும் பிசிபி முடிவு செய்யப்பட்டு, அடுத்த மாதம் போட்டி தொடங்க உள்ளது. இதில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன.
என்றாலும், தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொடக்க விழாவில் பங்கேற்க கேப்டன் ரோகித் சர்மாவை, பாகிஸ்தான் அனுப்ப பி.சி.சி.ஐ. மறுத்தது. இதைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஜெர்சி தொடர்பான விவாதம் எழுந்தது.
ஐ.சி.சி. நடத்தும் தொடர்களின்போது வீரர்கள் அணியும் 'ஜெர்சியில்' லோகோ, போட்டியை நடத்திடும் நாடுகளின் பெயர் இடம்பெற்றிருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் 'ஜெர்சி'யில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் மட்டும் நடக்க இருப்பதால், பாகிஸ்தான் பெயரை சேர்க்கவில்லை என பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏற்க மறுத்தது.
இதுகுறித்து பிசிபி, “பிசிசிஐ கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது. இது விளையாட்டிற்கு நல்லதல்ல. அவர்கள் பாகிஸ்தானுக்கு வர மறுத்துவிட்டனர். அவர்கள் தங்கள் கேப்டனை (பாகிஸ்தானுக்கு) தொடக்க விழாவிற்கு அனுப்ப விரும்பவில்லை. இப்போது அவர்கள் நடத்தும் நாட்டின் (பாகிஸ்தான்) பெயரை தங்கள் ஜெர்சியில் அச்சிட விரும்பவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. உலக நிர்வாகக் குழு (ஐசிசி) இதை அனுமதிக்காது மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காது என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தது.
இவ்விவகாரத்தில் தற்போது ஐ.சி.சி. தலையிட்டு பிரச்னையைத் தீர்த்துவைத்துள்ளது. “அனைத்து நாடுகளும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்” என அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து பிசிசிஐயும் ஐசிசியின் அறிவுரையை ஏற்றுக் கொண்டுள்ளது. ”எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐசிசியின் ஜெர்சி விதிகளைக் கடைப்பிடிப்போம்” எனத் தெரிவித்துள்ளது.