விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: இலங்கையை பந்தாடிய ஸ்டோய்னிஸ் - ஆஸ்திரேலியா அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை: இலங்கையை பந்தாடிய ஸ்டோய்னிஸ் - ஆஸ்திரேலியா அபார வெற்றி

JustinDurai

ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 'சூப்பர் 12' சுற்றில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இன்று மோதின. இதில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.  அந்த அணியில் அதிகபட்சமாக பத்தும் நிசங்க 45 பந்துகளில் 40 ரன்களும், சரித் அசலங்கா 25 பந்துகளில் 38 ரன்களும், தனஞ்சய டி சில்வா 23 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 11 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 17 ரன்னிலும், மேக்ஸ்வெல் 23 ரன்னிலும் அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடினார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்தில் அரை சதமடித்தார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்து இலக்கை விரட்டிப்பிடித்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 7  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 18 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்னும், ஆரோன் பின்ச் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.