விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் இன்று மோதல்

JustinDurai

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது . தொடரின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, கத்துக்குட்டி அணியான நமீபியாவை (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) சந்திக்கிறது.

தரவரிசையில் பின்தங்கியதால் நேரடியாக 'சூப்பர்12' சுற்றில் நுழையும் வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை அணி, தகுதிச்சுற்றில் விளையாடி அதில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் பிரதான சுற்றில் இடம்பெற முடியும். எனினும் தகுதிச்சுற்றில் நமீபியா, அமீரகம், நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்வதால் இலங்கைக்கு முதல் சுற்றில் பெரிய அளவில் சவால் இருக்காது எனத் தெரிகிறது.

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி இளம் வீரர்களை கொண்ட மிரட்டல் படையாக உள்ளது. சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என முன்னணி அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை தொடரில் இலங்கை சாம்பியன் ஆனது. தவிர பயிற்சி ஆட்டத்தில் ஷானகாவின் இலங்கை அணி, ஜிம்பாப்வேயை 33 ரன்னில் வென்றது.  இலங்கை-நமீபியா அணிகள் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சந்தித்த ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.  

நமீபிய அணி 2021 உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்து, நெதர்லாந்தை வீழ்த்தி 'சூப்பர்-12' சுற்றுக்கு முன்னேறியது. இதுபோல மீண்டும் சாதிக்க முயற்சிக்கலாம்.

இரு அணிகளின் வீரர்கள்

இலங்கை: தசுன் ஷனக (கேப்டன்), தனுஷ்க குணதிலகா, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வான்டர்சே, சமிக கருணாரத்னே, துஷ்மந்த குமார் சமீரா , லாபஜஹிச் சமீரா, தில்ஷன் மதுஷங்க, பிரமோத் மதுஷன்

நமீபியா: ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேஜே ஸ்மிட், திவான் லா காக், ஸ்டீபன் பார்ட், நிகோல் லோஃப்டி ஈடன், ஜான் ஃப்ரைலின்க், டேவிட் வைஸ், ரூபன் ட்ரம்பெல்மேன், ஜேன் கிரீன், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், டாங்கேனி லுங்காமேனி, மைக்கேல் வான் லிங்கன், பென் ஷிகோங்கோ, கார்ல் லோஹன் லோஹன்ஸ்டோக் , ஹெலாவ் யா பிரான்ஸ்.

இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து- ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) மோதுகின்றன.

இதையும் படிக்கலாமே: உலகக்கோப்பை வரலாற்றில் சரித்திரம் படைக்க போகும் IND Vs PAK கிரிக்கெட் போட்டி!