விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளுக்கு வழிவிடுகிறதா ஐசிசி ?

jagadeesh

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக உலகெங்கிலும் பல முக்கிய விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. உலகமே கொண்டாடும் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடைபெறுவதாக இருந்தது. அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் மார்ச் மாதம் நடைபெற இருந்த 13 ஆவது ஐபிஎல் டி20 தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்து டி20 உலகக் கோப்பை போட்டியும் ஒத்திவைக்கப்படலாம் என்றும் அப்படி ஒத்திவைக்கப்பட்டால் 2022 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்றும் இன்று செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை ஐசிசி வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

ஆனால் உலகக் கோப்பை தொடர் தொடங்க பல மாதங்கள் உள்ளதால், அதை ரத்து செய்வதை அல்லது ஒத்தி வைப்பதைக் குறித்து ஆலோசிக்கப்படவில்லை என உலகக்கோப்பையின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இருபது ஓவர் உலகக்கோப்பை ரத்து செய்யப்பட்டால், அந்தக் காலகட்டத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்களும் வெளியானது. இதனால் சர்ச்சையும் எழுந்தது.

இந்தச் சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக கடந்த வாரம் பேட்டியளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் "டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்க ஐசிசிக்கு ஏன் பிசிசிஐ ஆலோசனை வழங்க வேண்டும். ஐபிஎல் போட்டியை நடத்துவதற்காக ஒருபோதும் இத்தகைய முயற்சியில் பிசிசிஐ ஈடுபடாது. ஆஸ்திரேலியா அரசாங்கம் டி20 உலகக் கோப்பையை நடத்தலாம் என முடிவெடுத்தால் திட்டமிட்டபடி நடைபெறும். அது தொடர்பாக பிசிசிஐ எவ்விதமான ஆலோசனையும் வழங்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று வெளியாகியிருக்கும் சில செய்திகள் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான சாதகமாகவே பார்க்கப்படுகிறது. ஐசிசி வட்டாரத் தகவலின்படி "2021, 2022 பிப்ரவரி - மார்ச் மாதங்களில் டி20 உலகக் கோப்பையை நடத்த முடியாது. இதனை அக்டோபர் - நவம்பரில் மட்டுமே நடத்த முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான சாதகமான முடிவு என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

கிரிக்கெட் வட்டாரங்களில் பெறப்பட்ட தகவலின் படி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் மார்ச் முதல் மே முதல் வாரம் வரை நடைபெறும். அப்போது அனைத்து அணியின் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில்தான் இருப்பார்கள். பெரும்பாலும் இரு நாட்டு கிரிக்கெட் போட்டிகள் அந்த மாதங்களில் நடைபெறாத வகையில்தான் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் அட்டவணையைத் தயார் செய்யும். இப்போது இந்தாண்டு மேற்கண்ட மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. இப்போது அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பையும் நடைபெறாது.

அப்போது அந்த இரண்டு மாதங்கள் அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவதற்குக் கிடைப்பார்கள். எனவே இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிடும். அது இந்தியாவிலோ அல்லது வேறு நாடுகளில் கூட இருக்கலாம். ஏற்கெனவே இலங்கை, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளன.
அதேபோல 2021 ஐபிஎல் போட்டிகளையும் ஐசிசி தொந்தரவு செய்யாது, 2022 ஐபிஎல் போட்டிகளையும் ஐசிசி தொந்தரவு செய்யாது.

இதன் காரணமாகவேதான் மார்ச் மாதங்களில் டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாது என ஐசிசி தெரிவித்து வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்காக ஐசிசி தன் அட்டவணையை மாற்றுகிறதா எனத் தெரியாது, ஆனால் ஐபிஎல் போட்டியை நடத்தாமல் போனால் 4 ஆயிரம் கோடி நஷ்டம் என்று பிசிசிஐ தொடர்ந்து தெரிவித்து வருவதற்கான கைமாறாகக் கூட ஐசிசியின் முடிவாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.