விளையாட்டு

சச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி 

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஐசிசி  ‘ஹால் ஆஃப் ஃபேம்’  என்ற பெருமைக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் உலகில் பல வரலாற்று சாதனைகளுக்கு சொந்தக்காரர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் இவர்தான். அதேபோல ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற சாதனையையும் இவரை தன் வசம் வைத்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் இவரே முதலில் படைத்தார். இவ்வாறு சச்சின் டெண்டுல்கரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது சச்சினுக்கு ஒரு சிறப்பு பெருமையை அளித்துள்ளது. அதாவது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை ஐசிசி தனது ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற கெளரவத்தை வழங்கியுள்ளது. இந்தக் கெளரவம் இந்தியா சார்பில் ஏற்கெனவே பிஷன் சிங் பேடி(2009), சுனில் காவஸ்கர்(2009),கபில் தேவ்(2009),அனில் கும்ப்ளே(2015), ராகுல் திராவிட்(2018) ஆகியோர் பெற்றுள்ளனர். தற்போது அந்த வரிசையில் இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர் ஆறாவது வீரராக இணைக்கப்பட்டுள்ளார். 

இந்தக் கெளரவத்திற்கு சச்சின் உடன் சேர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொணால்ட் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை கேதரின் ஃபிட்பாட்ரிக் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.