விளையாட்டு

"பாகிஸ்தானில் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி நடக்கும்; அனைத்து நாடுகளும் பங்கேற்கும்" - ஐசிசி

jagadeesh

பாகிஸ்தானில் 2025 இல் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என நம்புவதாக ஐசிசி தலைவர் கிரேக் பார்க்ளே தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது. 2024 முதல் 2031 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிகளை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது. கடைசியாக 1996 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஐசிசி தலைவர் கிரேக் பார்க்ளே "2025 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்க அனைத்து நாடுகளும் பங்கேற்கும். பல ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் போட்டி நடைபெறும் என நம்புகிறோம்" என்றார்.

மேலும் பேசிய அவர் "பாகிஸ்தானால் போட்டியை நடத்த முடியுமா என்பதை பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. அவர்களால் நிச்சயமாக நடத்த முடியும் என்று நம்பினோம். அவர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு. பாகிஸ்தானுக்கு அனைத்து நாடுகளும் துணை நிற்கும் என நம்புகிறோம். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு திட்டமிட்டப்படி நடக்கும்" என்றார் கிரேக் பார்க்ளே.