2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படவிருக்கும் நிலையில், இம்முறையும் பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், இதை ஏற்காத பாகிஸ்தான் இந்தியாவிடம் விளக்கம் கேட்டதுடன், தொடரை நடத்துவதிலிருந்து விலகுவோம் என எச்சரித்திருந்தது. இதையடுத்து, இதற்கு முடிவெடுக்கும் வகையில் ஐசிசி, அதன் இயக்குநர்கள் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதையடுத்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டம், இன்று 15 நிமிடங்களே நீடித்தது. அப்போதும் இந்தியாவும் பாகிஸ்தானும் மாறிமாறி எதிர்ப்பு தெரிவித்தன. கூட்டத்தின்போது பாகிஸ்தான் தரப்பில், ”எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து ஐசிசியிடம் தொடர்பில் இருக்கிறோம். அதேநேரத்தில், எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் இன்னும் தெளிவாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கு இந்திய தரப்பில், ”மத்திய அரசு என்ன செய்யச் சொல்கிறதோ அதை வாரியம் செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பிலும் மாறிமாறி எதிர்ப்பு கிளம்பியதாலும், ஒருமித்த கருத்த ஏற்படாததாலும், கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐசிசி தரப்பு, ”பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் விவாதங்கள் வருவதாகவும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும்” என தகவல் வெளியாகி உள்ளது.