விளையாட்டு

‘கோலி போல் களத்தில் நிலைத்து ஆடவேண்டும்’ – மனம் திறக்கும் ஸ்மிருதி மந்தனா

‘கோலி போல் களத்தில் நிலைத்து ஆடவேண்டும்’ – மனம் திறக்கும் ஸ்மிருதி மந்தனா

JustinDurai
விராட் கோலி போல் களத்தில் விளையாட வேண்டும் என்று நினைத்திருப்பதாக ஸ்மிருதி மந்தனா மனம் திறந்துள்ளார்.
 
இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போனவர். முதல் பந்தில் இருந்தே களத்தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று விரும்புவர். பெண்கள் கிரிக்கெட்டின் ஷேவாக் என்று மந்தனாவை ரசிகர்கள் கொண்டாடுவது உண்டு.
சமீபத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றியும், ஊரடங்கு கால வாழ்க்கை குறித்தும்  ஸ்மிருதி மந்தனா மனம் திறந்துள்ளார்.
விராட் கோலியும், ஸ்மிருதி மந்தனாவும் 18 என்ற ஒரே மாதிரியான ஜெர்சி எண்களைக் கொண்டவர்கள். அதனால், விராட் கோலி பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த  ஸ்மிருதி மந்தனா, “நான் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. யாருடனும் என்னை ஒப்பிடுவது எனக்கு பிடிக்காது. ஆனால், விராட் கோலி போல் களத்தில் விளையாட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
 
அவரின் ஆட்டம் எனக்கு ஊக்கமளிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. பல சமயங்களில் கடுமையாக போராடி இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். அதேபோல், நானும் இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடித்தர வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.
கொரோனாவால் 4 மாதங்கள் வீட்டிற்குள் முடங்கியிருந்த போது எதிர்கொண்ட இன்னல் குறித்துப் பேசியபோது, “முதல் மாதம் மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், இதற்குமுன்பு நான் வீட்டிற்குள் அடங்கியிருந்தது கிடையாது. வீட்டில் இருந்த உபகரணங்களை வைத்து பயிற்சிகள் மேற்கொண்டேன்.
 
குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டேன். கடைசி மாதத்தில் மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தேன். சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவுசெய்வதை விட, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால், நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவற்றைத் தவிர்த்தேன்” என்று தெரிவித்தார்.