இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான போட்டிகள் நிறைவடைந்த நிலையில் வரும் 17-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
இந்தியா ஒருநாள் தொடரை 1-2 என இழந்திருந்தாலும் டி20 தொடரை 2-1 என வென்று காட்டியது. அந்த வெற்றி கொடுத்த முனைப்பை டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வெளிக்கொண்டு வர விரும்புவதாக பரிசளிப்பு விழாவின் போது தெரிவித்திருந்தார் கேப்டன் கோலி. அப்போது அவரிடம் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவீர்களா எனக் கேட்டதற்கு...
“பார்க்கலாம்… பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவது குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அதில் விளையாடினால் முழு ஆட்டத்தையும் விளையாட வேண்டுமென விரும்புகிறேன். அதனால் பிசியோ நிபுணர்களிடம் பேசி அவர்கள் கொடுக்கும் ஆலோசனையின்படி எனது முடிவை எடுப்பேன். கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அணியை காட்டிலும் இந்த முறை நாங்கள் வலுவாகவே இருப்பதாக கருதுகிறேன்” என கோலி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது பயிற்சி ஆட்டம் வரும் 11 ஆம் தேதி துவங்க உள்ளது. கேப்டன் கோலிக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளதால் முதல் டெஸ்ட் போட்டியோடு இந்தியாவிற்கு திரும்ப உள்ளார் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.