விளையாட்டு

முறையான பயிற்சி கொடுத்தால் சிட்டாக பறப்பேன்: ஏழை தடகள மாணவனின் மனக் குமுறல்

kaleelrahman

தடகளத்தில் சாதனை படைக்க விரும்பும் ஏழை மாணவர் ஒருவர் முறையான பயிற்சி பெற உதவிக்கு காத்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ஈஸ்வரி.  ராஜா கட்டட கூலி வேலைக்கும், ஈஸ்வரி செங்கல் சூளை வேலைக்கும் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியருக்கு மனோஜ் என்ற மகனும், சுமித்ரா என்ற மகளும் உள்ளனர்.


இவர்களில், மனோஜ் சேலம் தனியார் கல்லூரியில் மூன்றாமண்டும், சுமித்ரா முதலாமாண்டும் படித்து வருகின்றனர். இவர்கள் நால்வரும் பத்துக்கு பத்து அளவுள்ள அட்டை வேய்ந்த சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மனோஜிற்கு ஓட்டம் மிகவும் பிடித்த விசயமாக இருக்கிறது. முறையான பயிற்சி இல்லாமலேயே பல்வேறு பள்ளி கல்லூரியில் நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று வந்துள்ளார்.

மேலும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற இவர், கடைசியாக கோவாவில் நடைபெற்ற தடகள போட்டியில் நூறு மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். தனக்குத் தானே பயிற்சி எடுத்த நிலையிலேயே போட்டிகளில் வெற்றிபெறும் மனோஜ், தனக்கு முறையான பயிற்சி அளித்தால் ஓட்ட போட்டிகளில் தன்னால் பல்வேறு சாதனைகளை படைக்க முடியும் என்று கூறுகிறார்.

இந்த நிலையில், தற்போது அவரது நண்பர்கள் உதவியால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தனக்கு அனைத்து மைதான பயிற்சி, ஓட்டத்தில் எடுக்க வேண்டிய தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றால் தானும் பதக்கங்களை பெற முடியும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

அதனால், விளையாட்டில் ஆர்வமுள்ள, தனியார் அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள் இந்திய தடகள பயிற்சி மையத்தில் பயிற்சி எடுப்பதற்காக தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவரது நண்பர்கள் மற்றும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.