ரன் அவுட் ஆனதால் எதிர் முனையில் இருந்த புஜாரா மீது கோபம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ள கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஸ்கோர் 109 ரன்களை எட்டிய போது துரதிர்ஷ்டவசமாக ரன்–அவுட் ஆனார் ராகுல். பந்தை அருகில் தட்டிவிட்டு ஒரு ரன்னுக்கு பாதி தூரம் ஓடிய பிறகு எதிர்முனையில் நின்ற புஜாரா ஓடிவரவில்லை. இதனால் ராகுல் திரும்பி ஓடுவதற்குள் ரன்–அவுட் செய்யப்பட்டார். அவர் 57 ரன் எடுத்திருந்தார். இதனால் புஜாராவை கோபமாகப் பார்த்துவிட்டுச் சென்றார்.
போட்டி முடிந்த பின் பேசிய ராகுல், ‘காயத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதால் அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. 50 ரன்களுக்கு மேல் எடுத்ததில் மகிழ்ச்சி. டெஸ்டில் தொடர்ச்சியாக 6 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது பற்றி கேட்கிறார்கள். நான் அதுபற்றி யோசிப்பதில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதால் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்க வேண்டியது என் வேலை. எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகிவிட்டேன். இதனால் புஜாரா மீது எனக்கு கோபம் ஏதுமில்லை. ரன் அவுட் சகஜம்’ என்றார் ராகுல்.