விராத் கோலியை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ப்பதற்கு மகேந்திர சிங் தோனி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக பதவி வகித்தவர் திலிப் வெங்சர்கர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, விராத் கோலியை இந்திய அணியில் சேர்த்ததால் தேர்வுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டேன்’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவுக்கு வளரும் வீரர்களை கொண்ட அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் விராத்தின் ஆட்டம் என்னை கவர்ந்தது. அங்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, அவர் 123 ரன்கள் குவித்திருந்தார். அதனால் அவரை சீனியர் அணியில் சேர்க்க நினைத்தேன். ஆஸ்திரேலியாவில் இருந்து நான் இந்தியா வந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று விளையாட இருந்தது. அந்தத் தொடருக்கு விராத் கோலியை சேர்க்க நினைத்தேன். தேர்வுக் குழுவில் இருந்த மற்ற 4 உறுப்பினர்களும் என் முடிவை ஏற்றுக்கொண்டனர். ஆனால், கோலியை பற்றி அதிகம் அறியாததால் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் கேப்டன் தோனியும் தயக்கம் காட்டினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய பத்ரிநாத்தை சேர்க்க, தோனியும் கிறிஸ்டனும் ஆர்வமாக இருந்தனர். அப்போது பிசிசிஐ பொருளாளராக இருந்த ஸ்ரீனிவாசன், பத்ரிநாத்தை சேர்க்காதது பற்றி கேட்டார். கோலி சிறப்பாக ஆடுகிறார் என்பதால் தேர்வுசெய்தேன் என்றேன். இந்த சம்பவம் நடைபெற்ற சில தினங்களில் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டேன்’ என்று கூறினார்.