நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ரசிகர்களின் ஆதரவு அதிக அளவில் இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கோலின் முன்ரோ 59(42), ராஸ் டைலர் 54(27) மற்றும் கேப்டன் வில்லியம்சன் 51(26) ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணியில், ரோகித் சர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்தாலும் கே.எல்.ராகுல் 56(27), விராட் கோலி 45(32) ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். அதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 58(29) ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி 19 ஓவர்களிலே 204 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, “நாங்கள் போட்டியை நன்றாக அனுபவித்து மகிழ்ந்தோம். நியூசிலாந்து வந்துசேர்ந்த இரண்டு நாட்களிலேயே முதல் போட்டியை விளையாடியுள்ளோம். எங்களுக்கு சிறந்த வரவேற்பு இருந்தது. 80 சதவீதம் இந்திய ரசிகர்கள் இருந்தது நல்ல சூழ்நிலையை கொடுத்தது. 200-க்கும் அதிகமான இலக்கை துரத்தி விளையாடும் போது, ரசிகர்களின் உற்சாகம் தேவையாக இருக்கும்.
பயணம் காரணமாக உள்ள சிக்கல்களை பேச மாட்டோம். நாங்கள் காரணம் கூற விரும்பவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்தத் தொடரை வென்ற நம்பிக்கையுடன் இங்கு விளையாடுகிறோம். பந்துவீச்சு ஓவரின் போது மிடில் ஆர்டர் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அதனால்தான், 210 ரன்களுக்குள் நியூசிலாந்தை கட்டுப்படுத்த முடிந்தது. பீல்டிங் ஒன்றுதான் நாங்கள் சரிசெய்ய வேண்டிய விஷயம் என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.