விளையாட்டு

“எல்லாம் முடிந்த பின்னர் தான் ‘நோ பால்’ என எனக்கே தெரியும்” - வருந்திய ரோகித்

webteam

‘நோ பால்’ மூலம் பெற்ற வெற்றிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அதிருப்தியுடன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த பந்து ‘நோ பால்’ என்பது பின்னர் தெரியவந்து, அது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் பெங்களூர் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அத்தனை கேமராக்கள் இருந்தும், ‘நோ பால்’ கண்டுகொள்ளப்படாதது எப்படி என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில் மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா கூறும்போது, “நாங்கள் மைதானத்தில் இருந்து வெளியேறி எல்லாம் முடிந்த பிறகு தான், அந்த சம்பவம் எனக்கு தெரியும். சிலர் என்னிடம் அது ‘நோ பால்’ எனக் கூறினார்கள். இதுபோன்ற தவறு கிரிக்கெட்டிற்கு அழகல்ல. இது சிறிய விஷயத்தை கூட கவனிக்கமால் தவறவிட்டுள்ளார்கள். அதேபோன்று அதற்கு முந்தைய ஓவர் பும்ரா வீசிய பந்து ‘வைடு’ அல்ல. ஆனால் பும்ரா, மலிங்கா இருவரும் அங்கு பெரிய டிவி இருக்கிறது, அதில் என்ன நடந்தது என பார்த்திருக்கலாம். வீரர்கள் அதை காண இயலாது. கடைசி பந்தில் அது நடந்தது. அதன்பின்னர் நாங்கள் அனைத்து வீரர்களும் மைதானத்திற்குள் கை குலுக்க வந்துவிட்டோம். இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.