விளையாட்டு

இந்திய வம்சாவளி பெண்ணை மணந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

JustinDurai

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை திருமணம் செய்து கொண்டார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். 2015-ல் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தவர் ஆவார். இதனிடையே மனரீதியாக சில பிரச்னைகள் இருப்பதால், சில காலம் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாகக் கூறி சில மாதங்கள் பிரேக்கில் இருந்தார். பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பினார். மேலும் ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐ.பி.எல்.லில் ஆடிய மேக்ஸ்வெல்லை அந்த அணியே மீண்டும் தக்கவைத்தது.

இந்நிலையில், கடந்த 2020 பிப்ரவரியில் மேக்ஸ்வெல்லுக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினி ராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, வினி ராமன் - மேக்ஸ்வெல் ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பாக மேக்ஸ்வெல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், காதல் என்பது நிறைவுக்கான தேடல். இப்போது எனக்கு நிறைவடைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

அதே போல வினி ராமனும் கணவர் மேக்ஸ்வெல்லுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேக்ஸ்வெல் திருமணம் செய்துகொண்ட வினி ராமனின் பெற்றோர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் வினி ராமன் பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில்தான். அவர் மெல்போர்னில் மருந்தக பிரிவில் படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'எல்லோரும் வாங்க வீட்டை பாருங்க' தோனி எடுத்த திடீர் முடிவு - என்ன காரணம்?