’நாங்கள் திட்டமிட்டதை சரியான முறையில் செயல்படுத்த தவறியதால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தோற்றோம்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் சமனில் முடிவடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த இரண்டு போட்டியிலும் சதம் அடித்து மிரட்டினார்.
இந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாய் ஹோப் 95 ரன்களும் நர்ஸ் 22 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர். பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.
தொடர்ச்சியாக 3-வது முறையும் விராத் கோலி சதம் அடித்து அசத்துவாரா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி ரசிகர்களை ஏமாற்றாமல் விராத் சதம் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்தியா மோதிய கடைசி ஒருநாள் தொடரிலும் விராத் சதம் அடித்து சாதனை புரிந்திருந்தார். தற்போதும் வெஸ்ட் இண்டீஸ் உடன் தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடரில் சதம் அடித்து விளாசியது மூலம், எதிரணியுடன் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 4 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராத் கோலி புரிந்தார்.
அவர் சதம் அடித்து தனியாளாகப் போராடினாலும் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. 107 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். தவான் 35 ரன்னும், ரிஷாப் பன்ட் 24 ரன், அம்பத்தி ராயுடு 22 ரன், குல்தீப் யாதவ் 15 ரன்கள் எடுக்க மற்றவர்கள் யாரும் 10 ரன்களை தாண்டவில்லை. 47.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி இப்போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் தனி ஆளாக போராடிய விராத் கோலியின் சதமும் வீணானது. 22 பந்தில் 44 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் நர்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது, இந்தியா 1 வெற்றியும், வெஸ்ட் இண்டீஸ் 1 வெற்றியும் பெற்றுள்ளன. 1 போட்டி சமனில் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
(சாய் ஹோப்)
தோல்விக்கு பின் விராத் கோலி கூறும்போது, ‘எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால், முதல் 35 ஓவர்களில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. 227 ரன்களுக்கு 8 விக்கெட் என்று இருந்த அவர்களை, 250 முதல் 260 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால், அந்த இலக்கை எட்டியிருப்போம். ஆனால் கடைசி 10 ஓவர்களில் கொஞ்சம் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. நாங்கள் திட்டமிட்டதை சரியான முறையில் செயல்படுத்த தவறிவிட்டோம். வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ஆடும் அணி. அவர்களுக்குரிய நாளாக அமைந்து விட்டால் எந்த அணியையும் எளிதாக வெல்வார்கள்.
அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான். கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் விளையாடியிருந்தால் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். அணியின் கலவையும் சரியாக இருந்திருக்கும். அடுத்தப் போட்டியில் கேதர் ஜாதவ் களமிறங்குகிறார். அவர் வரும்போது அணி கலவை சரியாக அமையும். எனது சதம் பற்றி கேட்கிறார்கள். என்னை பற்றியே பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை. தொடர்ந்து அதுபற்றி கேட்பது எனக்கு தர்மசங்கடமாக இருக்கிறது’ என்றார்.