விளையாட்டு

என்ன நடந்தது என்று தெரியவில்லை, நான் பின்னோக்கி ஓடுவதைப்போல உணர்ந்தேன்: ஏபி டிவில்லியர்ஸ்

JustinDurai

ஆர்சிபி அணியில் அதிரடியாக ஆடி இறுதி ஓவரில் ரன்-அவுட் ஆகிய ஏபி டிவில்லியர்ஸ், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை சிதறவிட்டு 48 ரன்கள் சேர்த்தார். 

மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ‘த்ரில்’ வெற்றி பெற்றது. ஆர்சிபி அணி்யை வெற்றியின் வாசல் வந்து கொண்டு சென்ற ஏபி டி வில்லியர்ஸ், கடைசி ஓவரின் 4-வது பந்தில் ரன்-அவுட் ஆகி 48 ரன்னில் (2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) வெளியேறினார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்சல் படேல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மேலும் அந்த அணியில் சிறப்பாக ஆடிய கேப்டன் கோலி 33 ரன்களிலும், மேக்ஸ்வெல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

முன்னதாக  முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 வி்க்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ரன்-அவுட் குறித்து டிவில்லியர்ஸ்  கூறுகையில், ‘’முன்பு டிரெட்மில்லில் ரன்னிங் பயிற்சி எடுத்தேன். ஆனால் அது கடினமானதாக இல்லை. அதனால் எனக்கு அதில் திருப்தியில்லை. தற்போது மணலில் ரன்னிங் பயிற்சி எடுக்கிறேன். ரன்-அவுட் எப்படி ஆனேன்  என்று எனக்குத் தெரியவில்லை. நான் தட்டிவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடத் தொடங்கிய போது, நான் பின்னோக்கி ஓடுவதைப் போல உணர்ந்தேன். அது ஒரு அருமையான த்ரோ'' என்றார்.

பெங்களூரு அணி தனது அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணியை அடுத்த வாரம் புதன்கிழமை அன்று எதிர்கொள்கிறது.